வியாழன், 7 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -9) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

   அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 9  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -8)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!



 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 



அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி - 9)

அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

  

"அய்யா" என்று வாசலில் குரல் கேட்டது.

 கதவை திறந்தேன்.









மாடசாமியும், அவனது தலைவனும் வாசலில் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு பின்னால் ஆணும் பெண்ணுமாய் சிறு குடும்பமே வந்து கொண்டிருந்தது.

 எதோ நல்ல சம்பவம் தான் நடந்து இருக்கவேண்டும், என்று தோன்றியது.

 அவர்களை உள்ளே வரச்சொன்னேன்.

 வந்தவர்கள் அத்தனை பேர்களும் சட் சட் என்று காலில் விழுந்தனர்.  அதோடு ஒரு தார் வாழைப்பழம், அவர்கள் ஊரில் பிரசித்திப் பெற்ற லாலா மிட்டாய் கடையில் வாங்கிய ஜிலேபி, வெற்றிலை - பாக்கு உட்பட, எதோ கல்யாண சீர் போல் அடுக்கி வைத்து தரையில் என் முன் அமர்ந்தனர்.

 

குழந்தையை என்னிடம் காட்டினார்கள்.  கண்களில் எதோ மூலிகைச்சாறு வழிந்து கொண்டிருந்தது.  தொடர்ந்து மாடசாமி பின்னால் வந்தான்.  தன் மனைவியை எனக்கு அறிமுகபடுத்தினான்.

 "என்ன நடந்தது.  விவரமாய்ச் சொல்லேன்" என்றேன் மாடசாமியிடம்.

 கொல்லி மலையில் நடந்ததை மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

 "அய்யா, நாங்கள் ரெண்டு பேரும் கொல்லிமலைக்குப் போனோம்.  முதல்ல எங்களுக்கு கொல்லி மலைச்சித்தர் யாருன்னு அடையாளம் காண முடியவில்லை.  பலர் கிட்டே விசாரிச்ச போது ஒரு மைல் தூரம் மலை மேல் ஏறினா அங்கே இருப்பாரு, போய் பாருங்கன்னு சொன்னாங்க."

 

"நாங்க ரெண்டு பெரும் ஆளுக்கொரு பக்கமாக தேடிபார்த்தோம்.  அங்கேயும் சித்த வைத்தியரைக் காணவில்லை.  எங்க மனசு உடைஞ்சு போச்சு.அகத்தியர் சொன்னா அது சரியாக இருக்குமேன்னு நெனச்சுட்டு அலைச்சல் காரணமாக அப்படியே ஒரு மரத்தடியிலே துண்டைப் போட்டுட்டு தூங்கிட்டோம்."

 "அப்போ பாருங்கோ.  ஒரு வயதான பெரியவர் என்னை தட்டி எழுப்பி "நீ தானே மாடசாமி?" ன்னு கேட்டார்"

 "அமாம். அய்யா.  நீங்க யாருன்னு கேட்டேன்".

 

"என்னை பத்தி அப்புறமா சொல்லறேன்.  நீங்க ரெண்டு பேரும்தானே சேர்ந்து வந்தீங்கன்னு " கேட்டார்.

 "ஆமாங்க" என்றேன்.

 "சரி சரி என் கூட வா.  உன் பொண்டாட்டிக்கும், மருந்து தர்றேன். அதோட இவருடைய மகனுக்கும் தர்றேன். இதை வாங்கிட்டு, நான் சொல்றபடி வைத்தியம் செய்யுங்க, ஒம்பொண்டாட்டி குணமடஞ்சுடுவா,அவருடைய பையனுக்கும் கண் பார்வை வந்திடும்னு, அவராகவே சொன்னாருங்க"


"இவர் தான் அகத்தியர் சொன்ன கொல்லிமலை சித்தர்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.  ஆனா இவருக்கு எப்படி எம் பெயர் தெரிஞ்சுதுன்னு தான் ஒரே ஆச்சரியம்."

 

சரின்னு அவரைக் கும்பிட்டுட்டு என் பக்கத்திலே தூங்கிக் கொண்டிருந்த எங்க அண்ணனை எழுப்பினேன், அப்பால நாங்க ரெண்டு பெரும் அவரு பின்னாலே போனோம்க."

 

ஒரு குடிசை வாசல்ல எங்களை உட்கார வச்சிட்டு, உள்ளே போன அந்த சித்தர் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தாரு".

 

குழந்தை கண்ணில இந்த மூலிகைச்சாற்றை தினமும் மூணு வேளைக்கு விட்டுட்டே இருக்கணம்.  முப்பதாவது நாள்ல பார்வை தெரிய ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் முழு பார்வை தெரியணும்னா, இங்கே வந்து மேற்கொண்டு இந்த மூலிகைச் சாற்றை வாங்கிட்டு போ. கண்டிப்பா அந்த குழந்தைக்கு கண் பார்வை வந்திடும்னு, சொல்லி எங்க அண்ணன் கையிலே ஒரு பெரிய பாட்டில் நிறைய மூலிகைச்சாறு கொடுத்தார்".

 "எனக்குன்னு" நான் கேட்டேன்.

 "என்ன அவசரம். கொஞ்சம் பொறுமையாகத்தான் இரேன்னு என்னை சத்தம் போட்டுட்டு, இந்தா இதை பிடின்னு நிறைய பொடி கலந்த ஒரு பாக்கட்டை என்கிட்டே கொடுத்தாரு. பத்திரமா வாங்கிகிட்டேன்".

 இதை எப்படி சாப்பிடணம்னு கேட்டேன்.

 இதுல செந்தூரம், தேன் கலந்து மூணுவேளை சாப்பிடணம். உப்பு சேர்க்க கூடாது.  மோர் சேர்க்கலாம். காப்பி, டி குடிக்க கூடாது. இதை சாப்பிட்ட ரெண்டு நாளைக்கு லேசா காய்ச்சல் வரும்.அப்படி காய்ச்சல் வந்தால் இந்த மாத்திரையை சிறு கடுக்காயுடன் அரைச்சு சாப்பிட்டு வரட்டும். இருபத்தேழாவது நாள்ல அவளது இருதய நோய் விலகிவிடும். அப்புறமா, எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அவளுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது" என்றார்.

 

நாங்க ரெண்டு பேரும் அவர் கால்ல விழுந்து வணங்கி, "அய்யா இந்தாங்கன்ன்னு" பணம் கொடுக்க முன் வந்தோம்.

 "இது பாவப்பட்ட பணம், யாரையோ கொலை செய்ய வாங்கின முன்பணம். இதை வாங்கமாட்டேன்.நீங்க போயிட்டு வாங்கன்னு குடிசைக்குள்ளே போனாரு. அப்புறம் அவரு வரவே இல்லைங்க.

 



குடிசைக்குள்ளே எட்டி பார்த்தோம். அங்க யாரும் இல்லைங்க. ரொம்ப நேரம் நின்னு பார்த்துட்டு ஊருக்கு திரும்பிட்டோம்" என்றான் மாடசாமி.


ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 


★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -8)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!





கருத்துகள் இல்லை: