வெள்ளி, 1 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -1) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

 முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  4 (பகுதி -1)

          அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 1


கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!




 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 


அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -1)




அனுமத்தாசன் அய்யா கூறுகிறார்.....!

 


ஜீவ நாடியில் அகத்தியர் சொன்ன போது 

இதெல்லாம் உண்மை தானா? என்று தோன்றியது.

 

"அகத்தியனை சந்தேகப்படலாமா?" என்று அவரே கேட்டுவிட்டு,

 

"ஒரு தகவலை முன் கூடியே சொல்கிறேன்.

இன்று மாலை ஆறு மணியளவில் ஒருவன் உன்னைத் தேடி வருவான்.

அவன் ஒரு கோடீஸ்வரன், ஆனால் அவன் குடும்பத்தில் நிம்மதி இல்லை.

இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்.

பார்க்க பரதேசி மாதிரி இருப்பான். ஆனால் சிறந்த சிவ பக்தன்.

 

அவன் வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்க போகிறது.

அதுவும் இங்கு வந்து போன பிறகு" என்று பூடகமாக சொன்னார்.

 

எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திக் காட்டிய அகத்தியர் இப்போது

 என்ன அதிசயம் செய்து காட்டப் போகிறாரோ என்று எண்ணியபடி இருந்தேன்.


மாலை 6 மணி இருக்கும். அகத்தியர் சொன்னது போல் நடக்க முடியாமல் தள்ளாடியபடி ஒருவர் என் வீட்டு வாசலுக்கு வந்தார்.

 

"நீங்கள் தான் அகத்தியர் நாடி பார்ப்பவரா?" என்றார்.

 

"ஆமாம்" என்று தலை அசைத்தேன்.

 

"இந்தாருங்கள்" என்று ஒரு சிறு பாட்டிலைக் கொடுத்தார்!

அதை பார்த்த போது, அதில் "பூச்சிக்கொல்லி மருந்து" என்று

எழுதப்பட்டு இருந்தது. பாட்டிலில் பாதி மருந்தைக் காணவில்லை.

 

அதே சமயம் அவர் வாயில் நுரை லேசாக வெளியே வந்து கொண்டு இருந்தது!

 

இருந்தாலும், நாடி பார்க்க வந்த ஒருவர் விஷத்தை குடித்துவிட்டு

என்னிடம் நேராக வந்த போது,  உண்மையில் நான் ஆடிப்  போய்விட்டேன்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு" என்று பதறியபடியே கேட்டேன்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு" என்று பதறியபடியே கேட்டேன்.

 

"விஷம் குடித்துவிட்டேன்"

"ஏன்?"

 

"மனசு சரி இல்லை"

 

"சரி! அதுக்கு இங்கே ஏன் வரணம்?"

 

"நாடி பார்க்க"

 

"இந்த சமயத்திலா?"

 

"ஏன்? அகத்தியர் சொல்லமாட்டாரா?"

 

"கேட்டு பார்க்கணம். அதுக்கு முன்னால நீங்க பக்கத்து ஆஸ்பத்ரில

"அட்மிட்" ஆகி உங்களை குணப்படுத்திக்கிட்டு வரணம்" என்றேன்.

 

"முடியாது. எனக்கு இப்போதே நாடி பார்க்கணம்" என்றார்.

 

"அய்யா! நீங்க வயசில பெரியவங்களா இருக்கீங்க. முதல்ல நீங்க ஆசுபத்ரிக்குப் போங்க. அப்புறமா நான் உங்களுக்கு அங்கேயே வந்து படிக்கிறேன்" என்று பயத்தோடு கெஞ்சி பார்த்தேன்.

 

நான் பயத்தோடு கெஞ்சுவது அவருக்கு விளையாட்டாகத் தோன்றியது. பலமாக வாய் விட்டுச் சிரித்தார்.


சிரிப்பை விட அவர் வாயில் இருந்து வெளி வந்த நுரைதான் அதிகமாக இருந்தது. அந்த சாயங்கால நேரத்திலும் "கரு நீலம்" தெரிந்தது.

 

விஷத்தின் தன்மை அதிகமாகியிருக்கும். எப்படி இருந்தாலும் இந்த மனுஷன் அரை மணி நேரத்திற்குள் "அம்போ" னு போய் விட போகிறான் என்று பயம் ஏற்பட்டது.

 

அப்புறம் மாட்டிக்கொள்ள போவது நான்தான், என்பதை நினைக்கும் போது கை, கால்கள் உதரத்தான் செய்தது. அவரை அப்படியே அலக்காக தூக்கி அருகில் உள்ள ஆஸ்பத்ரியில் சேர்க்கலாம் என்று பார்த்தால் அன்றைக்கு பார்த்து, எனக்கு ஆள் துணை ஏதுமில்லை.

 

எப்படியோ அவரை சமாதானப்படுத்தி நானே ஆஸ்பத்ரியில் கொண்டு போய் சேர்த்தாலும் ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள் வரும்.

போலீஸ் என்னை கூப்பிட்டு விசாரணை செய்யலாம்


"நாடி பார்க்க வந்தோமா இல்லை,

நாலு பேருக்கு பதில் சொல்ல வந்தோமா?

எதற்கு எனக்கு இப்படிப்பட்ட சோதனை?" என்று மன இறுக்கம் ஏற்பட்டது.

 

அந்த பெரியவரை உட்காரக் கூட சொல்லவில்லை.

அவரும் நின்று கொண்டு தான் பேசினார்.

"சொல்லுங்க. எனக்கு நாடி படிக்க முடியுமா? முடியாதா?"

இது எனக்கு ஆத்திரத்தை தந்தது. ஆனாலும் அடக்கி கொண்டேன்!

 

"இப்போதைக்கு இந்த நிலையில் என்னால் தங்களுக்கு நாடி படித்து பலன் சொல்ல முடியாது".

 

"சரி! எனக்கு ஒண்ணே ஒண்ணு மாத்திரம் கேட்டு சொல்ல முடியுமா?"

 

"என்ன வேணும்?"

 

"இப்போ இந்த பாட்டிலில் இருந்த விஷத்தை குடிச்சிருக்கேன்.

இதுனால நான் உயிர் பிழைப்பேனா? இல்லை செத்து போயிடுவேனா?

அதை மட்டும் அகத்தியர்கிட்டே கேட்டுச் சொல்லுங்க!"

 

மனுஷன் தீர்க்கமாகவே பேசினார்.

விஷத்தை குடித்த மாதிரியே தெரியவில்லை.

 

எனக்குத்தான் விஷம் குடித்தது போன்று ஒரு நிலை ஏற்பட்டது.

 

"என்னங்க! சீக்கிரம் அகத்தியர்கிட்டே கேட்டு பதில் சொல்லுங்க.

குடலையும், வயிற்றையும் எரியுது" என்று மிரட்டினார்.

 வெறுப்பு தான் வந்தது.

 "அதான் சொல்றேன்ல, இந்த ஒரு கேள்வியை மட்டும் நாடியிலே கேட்டு சொல்லுங்க. நான் அப்படியே போய்டுறேன்" என்று பிடிவாதம் பிடித்தார்.

 

"ஒரே ஒரு கேள்வி தான் கேட்டீங்க. அதுக்கு மாத்திரம் பதில் சொல்றேன். ஆனால்... உடனே நீங்க இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்" என்று நானும் கறாராக சொன்னேன்

 

எப்படியோ இந்த மனுஷன் இடத்தை காலி பண்ணினால் போதும்னு எனக்கு தோன்றியது.

 

அவரை உட்கார சொல்லிவிட்டு, அவசர அவசரமாக குளித்து விட்டு பூசை அறையில் இருந்த நாடியை வெகு வேகமாக் தூக்கி கொண்டு வாசலுக்கு வந்தேன்.

 

இதற்குள் ஏதாவது ஏடாகூடமாக ஆகி விட கூடாதே என்று அகத்தியரிடம் வேண்டி கொண்டேன்.

 நல்ல வேளை, அந்த மனிதருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.

 ஓலை கட்டை பிரிக்க முற்படும் போது,

இதுவரை நேராக இருந்த மனுஷர், வாந்தி எடுக்க முயன்றார்.

 கண்கள் நேராக சுழல, அவர் உடலும் நடுங்கியது

 "சரிதான். இனிமேல் இவருக்கு நாடி படிக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏதோ கெடுதல் நடக்க போகிறது என்று நினைத்து, ஓலைக்கட்டை மூடத் தொடங்கினேன்

 "நான் உயிரோடு இருப்பேனா?  மாட்டேனா?

என்று படியுங்க" என்று வற்புறுத்தியதால்,

வேறு வழி இன்றி நாடி படிக்க ஆரம்பித்தேன்

ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!



முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  
நன்றிகள் 


★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 4  (பகுதி -1)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!









கருத்துகள் இல்லை: