அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 : பகுதி - 3
முந்தைய பகுதிக்கு :
ஜீவநாடி அற்புதங்கள் # : 5 (பகுதி -2)கோடீஸ்வர பரதேசியும்
ஜீவநாடி அகத்தியரும் !!
( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !!
அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!
அனுமத்தாசன் அய்யா தொடர்ந்து..கூறுகிறார்.....!
விடியல் காலை மூன்று மணி ஆயிற்று.
வழக்கம்
போல அகத்தியரை வழிபட்டு,
அந்த
பெரியவர் எதற்காக என்னை வந்து சங்கடபடுத்த வேண்டும்?
அவர்
இப்போது உயிரோடு இருக்காரா? இல்லையா?" என்று
நாடியில் கேட்டேன்.
"இனிய மைந்தா! அவன் உயிரோடு தான் இருக்கிறான். அதோடு
அவனுக்கு இருந்த நீண்ட நாள் குடல் வியாதியும் தீர்ந்து விட்டதால், ஆரோக்கியமாகவும் இருக்கிறான்" என்றார்
அகத்தியர்.
"இருபது ஆண்டுகளாக நாடோடியாகத் திரிந்த அவனுக்கு குடல் நோய் ஏற்பட்டது. எங்கு சென்று வைத்தியம் பார்த்தும் குடல் நோய் தீரவில்லை.
கடைசியாக யாரோ சொல்லி கொல்லிமலைக்குச் சென்றான். அங்கிருக்கும் சித்தர்கள் கொடுத்த மூலிகைகள் ஓரளவுக்கு பலன் தந்தது.
ஆனால், முழுமையான பலன் தரவில்லை.
கடைசியாக என்னை நோக்கி இங்கு வந்தான்.
சிவபக்தனாக இருப்பதால் அவன் நோயை குணபடுத்தலாம் என்று யாம் நினைத்தோம். அதற்குள் வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டு இங்கு வந்தான். அவசரப்பட்டு எடுத்த முடிவிலும் ஒரு நன்மை கிடைத்தது.
அந்த நபரை காப்பாற்ற, நீ கொடுத்த அந்த நவபாஷாண விபூதி பிரசாதமும் சந்தன பிரசாதமும், அவனது குடல் நோயை முற்றிலும் குணமாக்கிவிட்டது. இலையெனில் அவன் புற்றுநோய் வந்து அவதிப்பட்டு இருப்பான் என்றார்.
"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷாண முருகப்பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்து விட்டது. இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷாண விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.
"ஆச்சரியம் தான்!" என்று அதிசயித்தேன்.
"இதிலென்னடா ஆச்சரியம் இருக்கிறது. இனி அவன் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கபோகிறது. அதை கேட்டு நீயும் விழி உயர்த்தி வியக்க போகிறாய்" என்று முடித்தார் அகத்தியர்.
"சில காலம் பொறுத்திரு. உனக்கு அவனை பற்றித் தகவல் வரும். அதற்கு முன்பு சில சோதனைகளை அவன் சந்திக்க வேண்டி இருக்கும்" என்று சொல்லி முடித்துகொண்டார்.
அகத்தியர் இதை சொல்லி முடிக்கவும், தட தட வென்று ஏழெட்டு பேர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் கையில் கூர்மையான ஆயுதங்கள் பல இருந்தன.
பார்வையில் கொடூரம் தெரிந்தது.
அவர்கள் கேட்ட முதல் கேள்வி இது தான்.
அவர்களின் மிரட்டல் தொனி அதிர வைப்பதாக இருந்தது.
பயத்தில் எனக்கு நாக்கு ஒட்டி கொண்டு பேச்சு வர மறுத்தது.
"நேத்திக்கு ஏதோ ஒரு சாமியார் மாதிரி ஒருத்தர் வந்தாராமே?
இப்போ அவர் எங்கே இருக்கார்னு தெரியுமா?"
என்று ஆக்ரோஷமாகக் கேள்வி கேட்டவனைப் பார்த்தேன்.
அவன் முகத்தில் முரட்டுத்தனமும், கொலை வெறியும் தெரிந்தது.
ஏதோ ஒரு முக்கிய காரணமாக அந்த பெரியவரைத் தேடி வந்திருப்பது தெரிந்தது. பல வருஷங்களுக்கு முன் காணாமல் போன இந்தப் பெரியவரைத் தேடி இப்போது இங்கு வந்திருக்கிறார்கள் என்றால்,
இதன் பின்னணியில் ஏதோ ஓர் மர்மம் இருப்பது போல தோன்றியது.
அவரைத் தேடி இவ்வளவு தூரம் இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால்,
ஒன்று அவரை கடத்திக்கொண்டு போகவேண்டும்.
இல்லையேல், அந்த கோடீஸ்வரப் பெரியவர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் அவரது சொத்தை அடைய முடியாது என்று நினைத்து, அவரை கொன்றுவிடத் தீர்மானித்திருக்க வேண்டும், என்று என் உள்ளுணர்வு உறுத்தியது.
இவர்களை இப்படியே விட்டுவிடக்கூடாது.
சமாதானப்படுத்தி மனதை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன்.
அவர்களுக்கு தலைவன் போல இருந்தவனை அழைத்து உட்காரச் சொன்னேன். முதலில் மறுத்தான். பின்பு அமைதியாக என் பக்கத்தில் அமர்ந்தான்.
"குடிக்க தண்ணீர் வேண்டுமா?" என்றேன்
"தேவையில்லை" என்று முரட்டுத்தனமாக பதில் வந்தது.
"உங்களுக்கு வேண்டாம். சரி.
உங்களுடன் வந்திருப்பவர்களுக்கு வேண்டுமா?" என்றேன்.
"அவர்களும் சாப்பிட மாட்டார்கள்" என்று பதில் வந்தது.
"சரி! எதற்காக அந்த சாமியாரை தேடி வந்திருகிறீர்கள்?"
"அந்த காரணமெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது.
அந்த ஆளு இப்போ எங்கே இருக்கான்னு சொல்லு"
மரியாதை இல்லாமல் பேசினான்.
சிறிது நேர மௌனத்துக்கு பின் நானே தொடர்ந்தேன்.
"அவர் யார்? எங்கிருந்து வந்திருக்கார்னு எனக்கு தெரியாது. திடீர்னு நேத்து ராத்திரி வந்தாரு. ஏதோ மனவருத்ததிலே விஷ மருந்து குடிச்சிருப்பார் போலிருக்கு. அப்புறம் அவராகவே போயிட்டாரு. அவ்வளவு தான்."
"எதுக்காக உங்க கிட்டே வரணம்?"
"நாடி படிக்க"
"நாடின்னா? என்று குறுக்கு கேள்வி கேட்டான்.
நாடி பற்றி எல்ல விவரங்களையும் நிதானமாக சொன்னேன்.
அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
பொறுமையாக அத்தனையும் கேட்டான்.
"அப்போ அகத்தியர் கிட்ட கேட்டா எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பருன்னு சொல்லறீங்க!"
"ஆமாம். ஆனால் இது அவரவர் அதிஷ்டத்தை பொறுத்தது" என்றேன்!
அவனுக்கு ஏதோ ஒன்றை என்கிட்டே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.
தன் கூட வந்தவர்களை உட்காரச் சொன்னான்.
தாகத்திற்கு அவனே தண்ணீர் கேட்டான். கொடுத்தேன்.
"அந்த ஆள் இப்போ எங்கே இருக்கான்.
உயிரோடு இருக்கானா அகத்தியர் கிட்டே கேட்டு சொல்லு" என்றான்.
"எதுக்காக அந்த ஆளைப்பதியே கேட்கறீங்க?"
"அவனை கொண்டு போய் ஒருத்தர்கிட்டே ஒப்படைக்கணம்."
"ஒப்படச்சிட்டா?"
"நிறைய பணம் கிடைக்கும். கொஞ்ச நாளைக்கு சந்தோஷமா இருப்போம்"
"அப்புறம்....." என்று கேட்டபோது அவனுக்கு எரிச்சல் தாங்கவில்லை.
"இதையெல்லாம் நான் இப்போ சொல்ல முடியாது.
எனக்கு அந்த ஆள் எங்கே இருக்கான்னு முதல்ல கேட்டுச் சொல்"
என்று அதிகாரத்துடன் கேட்டான்.
இவனை எளிதில் சமாதானப்படுத்த முடியாது என்பது தெரிந்து போயிற்று.
"பகவனே, எந்த உயிருக்கும் ஆபத்தில்லாமல் நல்ல வழியைக் காட்டு" என்று அகத்தியரை வேண்டிக்கொண்டேன்.
__________________________________________________________________________
●★●★●★●
முழுதும் வாசித்த அனைவருக்கும் .. நன்றிகள்
★ கருவூரான் ★
www.t.me/jeevanaadi/ & https://siththarkaldesam.blogspot.com/
இதன் முந்தைய தொடர்ச்சி : ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -2)
+ தொடர்ச்சி : ஜீவநாடி வாக்கியம் பெற / ஜீவநாடி படிக்க அணுகுவது எப்படி ?
முந்தைய பகுதிக்கு : நழிந்த தொழிலதிபரை உயர்த்திய நந்தீசர் ஜீவநாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக